பிரதமராக நிலைத்திருப்பதற்கான ஆதரவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

 
 
 

லங்காவி, 14 பிப்ரவரி [பெர்னாமா] -- நடப்பு அரசாங்கத்தின் ஆட்சித் தவணை நிறைவடையும் வரையில், தாம் தொடர்ந்து பிரதமராக நிலைத்திருப்பதற்கு ஆதரவளிக்கும் தரப்பினரின் நடவடிக்கைக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தீர்க்கமாகத் தெரிவித்திருக்கின்றார்.

அதோடு, இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற விருக்கும் ஆசியப் பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பான, ஏபெக்கின் உச்சநிலை மாநாட்டிற்குப் பின்னரே, தமது அனைத்துப் பதவிகளையும் விட்டுக் விலகப் போகும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தீர்க்கமாகக் கூறுகின்றார்.

"நான் எந்தவொரு நடவடிக்கையிலும் சம்பந்தப்படவில்லை. எபெக்கிற்குப் பின்னர் நான் பதவி விலகுவேன் என்று உறுதியளித்திருக்கின்றேன். நான் எனது வாக்குறுதியில் உறுதியாக இருக்கின்றேன். நான் மற்ற நடவடிக்கையில் சம்பந்தப்படவில்லை. பதவி விலகுவதென்று மட்டுமே வாக்குறுதி வழங்கினேன். பதவி விலகுவேன்" என்று டாக்டர் மகாதீர்  தெரிவித்தார்.

நடப்பு அரசாங்கத்தின் ஆட்சித் தவணை நிறைவடையும் வரையில், தாம் தொடர்ந்து பிரதமராக நிலைத்திருப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், 138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமானத்தில் கையெழுத்திட்டிருப்பதாகச் செய்தித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பது குறித்து துன் டாக்டர் மகாதீர் முகமது இவ்வாறு கருத்துரைத்தார்.

"இன்று நம்பிக்கைக் கூட்டணியிடம் பெரும்பாண்மை இருக்கிறது. அதில் எவ்வாறு 138 எண்ணிக்கைக் கிடைத்தது. அது மற்றவர்களின் வேலை. அந்த எண்ணிக்கைக் கிடைக்கும் வரையில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. அப்படியென்றால் நம்பிக்கைக் கூட்டணியும் ஆதரவு வழங்கினால் மட்டுமே அத்தகைய எண்ணிக்கைக் கிடைக்கும்" என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கான அதிகாரப் பரிமாற்றம், தகவல் சாதனங்களின் கவனத்தை ஈர்ப்பதால் அதன் தொடர்பான செய்திகள் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

"இது தகவல் சாதனங்களின் வேலைதான். அவர்கள்தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.. (அதிகாரப் பரிமாற்றம் குறித்த செய்தியைச் செய்வதில்) சர்ச்சை இருந்தால்தான் செய்தி. ஆகவே, செய்தியாளர்களுக்கு, நாங்கள் சண்டைப் போட்டால், நான் அன்வாரிடம் சண்டைப் போட்டால், அனைவரிடமும் சண்டைப் போட்டால், ஆர்வமாகச் செய்திச் செய்வார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

அதிகாரப் பரிமாற்றம் தொடர்பில் தாம், டாக்டர் மகாதீருடன் சந்திப்பு ஒன்று நடத்தியதாக, நேற்று வியாழக்கிழமை டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராயிஹிம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

-- பெர்னாமா

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்