பொது

மலேசிய அரசாங்கம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறது

14/02/2020 05:32 PM

லங்காவி, 14 பிப்ரவரி [பெர்னாமா] -- நாட்டில், கொவிட்-19 கிருமிப் பரவுலைத் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மலேசிய அரசாங்கம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதைக் காண முடிகிறது.

அக்கிருமியிடமிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்குப் பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் இம்முயற்சி தொடரப்படும் என்று, தாம் எதிர்பார்ப்பதாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கின்றார்.

"நாங்கள் தொடக்கத்தில் இருந்தே விழிப்புடன் இருக்கின்றோம். மலேசியாவுக்கு, குறிப்பாகச் சீனாவில் இருந்து வருபவர்களிடம் தொடக்கத்திலிருந்தே நாங்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றோம், அவர்கள் அக்கிருமியுடன் வந்திருப்பதாக நாங்கள் சந்தேகித்தால், அவர்களை  நாங்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைப்போம். ஹுனானில் இருந்து அழைத்து வரப்பட்ட மலேசியர்களையும், நாங்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைத்தோம். இது வரையில் ஆக்கப்பூர்வமாக இருக்கிறது. பொதுமக்களின் ஆதரவோடு நம்மால் இந்நோயைத் துடைத் தொழித்து அதிலிருந்து நமது நாட்டைப் பாதுகாக்க முடியும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று பிரதமர் தெரிவித்தார்.

சீன நாட்டுத் தலைவர் மீது தாம் கவலைக் கொள்வதுடன், அந்நாடு, கொவிட்-19 கிருமியைக் கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், சீனாவிலிருந்த மலேசியர்களைத் திரும்ப நாட்டிற்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் சீனா வழங்கிய ஒத்துழைப்பிற்கும் தாம் அந்நாட்டு அதிபரிடம் தொலைப்பேசி அழைப்பின் வழி நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக அவர் கூறினார்.

முன்னதாக அவர், கெடா, லங்காவியில், இன்று வெள்ளிக்கிழமை நடந்த வில்லா சிரேஹான் திட்டத்தின் இரண்டாம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.

-- பெர்னாமா