அனைவரிடமும் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நாள்

 
 
 

கோலாலம்பூர், 14 பிப்ரவரி [பெர்னாமா] -- பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக அன்பர்கள் தினம். 

வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த அன்பும் காதலும் ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளிர்ந்துப் பிரகாசிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக இந்நாள் உலக மக்களால் ஆண்டுத் தோறும் கொண்டப்பட்டு வருகிறது. 

தொடக்கத்தில் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்ட இந்நாள், நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரிடமும் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்குடன் தற்போது இந்நாள் கொண்டாடப்படுகிறது.

அதன் அடிப்படையில், பெற்றோர், சகோதரர், நண்பர், காதலர், உற்றார் உறவினர் என்று அனைத்துத் தரப்பினராலும் மகிழ்யோடு இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருவதைப் பரவலாகக் காண முடிகிறது. 

அன்பு நிறைந்த இந்நாளுக்குப் பின்னால் நிறைந்திருக்கும் கதையையும் சுவாரஸ்யமான தகவல்களையும் தொடர்ந்து காண்போம்.

கி.பி 270-ஆம் ஆண்டில், ரோம் பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கும், இல்லற வாழ்வில் இணைவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

திருமணம் செய்து கொண்டால் ஆண்களின் வீரமும், போர்க் குணமும் குறைந்து அவர்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பது அரசரின் எண்ணமாக இருந்தது. 

இந்த அரசக் கட்டளையை மீறி, திருமணம் செய்து கொள்ளத் துடித்த ஆண்களுக்குத் திருமணங்கள் நடத்தி வைத்து, அந்நாட்டில் அவர்களை இல்லற வாழ்க்கைக்கு அழைத்துச் சென்ற வேலண்டைன் எனும் பாதிரியாரை, ரோம் பேரரசர் கொன்ற நாள்தான் பிப்ரவரி 14 என்பதை வரலாற்றுக் கதைக் கூறுகிறது. 

இந்த அன்பர்கள்  தினத்தை யார் ஆர்வமாய் வரவேற்கிறார்கள் என்றால் அதற்கு உண்மையான பதில் இன்று வியாபாரிகள்தான். 

வாழ்த்து அட்டைகள், பரிசுகள், இனிப்புகள், மலர்கள், புத்தகங்கள் என்று இன்றைய தினத்தில் மக்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ள லாபம் அடைவதும் அந்த வியாரிகள்தான். 

அமெரிக்காவில், காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி.

இந்நாளில் விற்கப்படும் ரோஜாக்களின் எண்ணிக்கைச் சுமார் 22 கோடி. 

பூக்களைப் போட்டிப் போட்டு வாங்குவதில் 73 விழுக்காட்டில் முன்னிலை வகிப்பவர்கள் ஆண்கள் என்று ஆய்வொன்று கூறுகிறது. 

அதுபோல, கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்தப் படியாகச் சாக்லட் அதிகம் விற்பனையாவதும் இந்த அன்பர்கள் தினத்தில்தான். 

இளம் வயதினர், சுமார் 110 கோடியே 50 லட்சம் டாலர்ப் பணத்தைச் சாக்லட் வாங்கியே இந்நாளில் செலவழிப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நவீன யுகத்தில் தகவல் தொழில் நுட்பம் ரீதியாக வாழ்த்துகள் கூறப்பட்டு வரும் வேளையிலும், உலக அளவில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்தப்படியாக 100 கோடிக்கும் மேல் வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது,  இந்நாளில் என்பது கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. 

அன்பர்கள்  தினத்தில் காதலர்கள் வாழ்த்துகளையும் கவிதைகளையும் எழுதும்போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப்போல நாம் வாழ வேண்டும் என்று குறிப்பிடுவது வழக்கம் என்பதால், அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் இன்றுவரை அதிகம் இடம் பிடித்த பெயர்கள் ரோமியோ–ஜூலியட்,  லா–மஜ்னு, கிளியோபட்ரா–மார்க் ஆண்டனி, ஷாஜஹான்–மும்தாஜ். 

RICHARD CADBURY என்பவர்தான், கடந்த 1800-ஆம் ஆண்டில் முதன் முதலாக வேலண்டைன் சாக்லடை அறிமுகப்படுத்தி வைத்தவர்.  

அவர் ஆரம்பித்த பழக்கம் இப்போது உலகெங்கும் பரவிவிட்டது. 

அலெக்சாண்டர் கிரஹெம்பெல், அன்பர்கள் தினம், தொலைபேசி என்று இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. 

தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876-ஆம் ஆண்டு அவர் விண்ணப்பித்த நாள் பிப்ரவரி 14 

காதலர் தினம், இஸ்லாமியச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறப்பட்டு, சவூதி அரேபிய மத அமைப்புகளால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.  

இப்படியாக, இன்னும் பல்வேறு சுவாரிஸ்யமான கதைகளையும் வரலாறுகளையும்  கொண்டிருக்கும் இந்த அன்பர்கள் தினம், வெறும் காதலர்களுக்கான நாள் என்பதைக் கடந்து, உண்மையான உறவின் அடையாளத்திற்கான நாளாகவும் கொண்டப்பட்டு வருகிறது. 

இன்று COVID-19 தோற்று நோயின் அச்சிறுத்தலால், அன்பர்கள் தினம் கொண்டாட்டம் உலக அளவில் மிதமான அளவில் இருப்பதைக் காண முடிகிறது. 

அடுத்த நொடி நமக்குச் சொந்தமில்லை என்பதால், இருக்கும் தருணங்களில், முகம் தெரிந்த உறவுகளோடு மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களோடும் நேசம் பகிர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்பதைப் பெர்னாமா தமிழ்ச் செய்தி அன்போடு பதிவு செய்கிறது.

-- பெர்னாமா 

 

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்