உலக வானொலி தினம் 2020

 
 
 

கோலாலம்பூர், 13 பிப்ரவரி [பெர்னாமா] -- தன் பன்முகத்தினால், மனிதக் குலம் கொண்டாடும் உன்னதக் கருவியாக வானொலி திகழ்கிறது. 

சிந்திக்க வைக்கும் குட்டிக் கதைகள், கேள்வி பதில், வியப்பு மிக்க மற்றும் அறியா தகவல்கள், நாட்டின் மற்றும் உலகின் அண்மையத் தகவல்கள், ரசனைக்குறிய பாடல்கள் என்று, மக்களுக்கு இடைவிடாத சேவையை வானொலி வழங்கி வருகிறது. 

இன்றையக் காலக் கட்டத்தில், சமூக வலைத் தளங்களினாலும் தொழிநுட்ப வளர்ச்சியினாலும், பல கண்டுப் பிடிப்புகளின் பயன்பாடுகள் குறைந்துக் கொண்டே போன போதிலும்,  அவற்றைத் தனது பலமாக மாற்றிக் கொண்டு, வானொலி சேவை, இன்று வரையிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து, பீடு நடைப் போடுகிறது. 

"கம்பியற்ற தகவல் தொடர்பு முறை", மார்க்கோனி விதி என்ற சரித்திரமிக்க கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கிய குலீல்மோ மார்க்கோனி, என்பவர் வானொலியும் அதற்கான கருவிகளையும் கண்டுபிடித்தார். 

மலிவான வழியில், ஒரே சமயத்தில் அதிகமானோருக்கு விரைந்துத் தகவலைக் கொண்டுச் சேர்ப்பதில் வானொலி இன்றும் பங்காற்றி வருகிறது. 

100 ஆண்டுகளுக்குப் பின்னரும், தொழிநுட்ப வளர்ச்சியினால் பின்தங்காமல், அதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இன்று பலம் பொருந்திய துறையாக வானொலித் துறை வளர்ச்சிக் கண்டிருப்பதாக, நாட்டின் பிரபல வானொலி அறிவிப்பாளர் டி.எச்.ஆர். உதயா தெரிவித்திருக்கிறார். 

தொழிநுட்ப வளர்ச்சி, வானொலித் துறையில் முக்கியப் பங்கு ஆற்றுகிறது. 

குறிப்பாக கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது வானொலி அறிவிப்பாளர்களின்  வேலைப் பழுக்கள் சற்றுத் குறைந்திருப்பதோடு, இளைஞர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்திருப்பதாக, 18 ஆண்டுகளாக வானொலித் துறையில் தனக்கென்ற முத்திரையைப் பதித்துக் கொண்ட உதயா தெரிவித்தார். 

வானொலித் துறையின் இத்தகைய வளர்ச்சிக்கு, தொழிநுட்ப வளர்ச்சி ஒருபுறமிருக்க, நேயர்களின் ஆதரவு மூலக் காரணமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. 

அவர்களின் ரசனைகளுக்கு ஏற்ப, பொழுது போக்கு அம்சங்கள் அடங்கிய நிகழ்சிகளுடன் சமூக கடப்பாட்டுடனும், அதே சமயத்தில் அறிவார்ந்த தகவல்களை வழங்கும் திறமையை வானொலி அறிவிப்பாளர்கள் தற்போது கொண்டிருக்க வேண்டியது அவசியம். 

தினந்தோறும் ஒரே பாணியில் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டால், நேயர்கள் எளிமையாக சலிப்பு அடைய நேரிடும் என்று உதயா குறிப்பிட்டார். 

இந்நிலையில், சோகத்திலும், மகிழ்ச்சியிலும் மனம்விட்டு பேசவும், தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்கவும், வானொலி, நேயர்களின் உற்ற நண்பனாக இருக்கிறது. 

மக்களின் அன்றாட வாழ்க்கையில், சில சமயங்களில் ஓர் அங்கமாக இருக்கும் வானொலிக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு, 2012 பிப்ரவரி 13 ஆம் தேதி முதல், அனைத்துலக வானொலி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது 

எத்தனை சவால்கள் வந்தாலும், அதனை தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டு, நேயர்களுக்காக இன்று வரையிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வானொலித் துறையைச் சார்ந்த அனைவருக்கும் இத்தினம் ஒரு சமர்பணம்.  -- பெர்னாமா 

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்