உலகம்

23 குழந்தைகளைப் பினைக் கைதிகளாகப் பிடித்து வைத்தத் தம்பதியர் சுட்டுக் கொலை

01/02/2020 12:34 PM

உத்தர பிரதேசம், 31 ஜனவரி -- வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், ஆடவன் ஒருவனால் 11 மணி நேரம் பினைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 23 சிறுவர்களை, அவனிடமிருந்து போலீசார் மீட்டிருக்கின்றனர்.

 

இந்த மீட்பு நடவடிக்கையின்போது, அந்த ஆடவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். 



தமது மகளின் பிறந்த நாளுக்காக அந்த 23 சிறுவர்களை, உத்தர பிரதேசம், வாருக்கபாட் என்ற இடத்திலிருக்கும் கசாரியா கிராமத்தில் உள்ள தமது வீட்டிற்கு அழைத்திருந்த அவ்வாடவன் பின்னர் அச்சிறுவர்களைப் பினைப் பிடித்ததாக கூறப்பட்டது. 



நேற்று வியாழக்கிழமை நடந்த இச்சம்பவத்தின்போது, அவ்வாடவன் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக போலீசார் கூறினார். 

வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்யப் போவதாக அவ்வாடவன் மிரட்டியதைத் தொடர்ந்து, அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை தங்களுக்கு ஏற்பட்டதாக, உத்தர பிரதேச மாநில போலீஸ் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் தெரிவித்தார். 



இச்சம்பவத்தில், அவ்வாடவனின் மனைவியும் இறந்ததாக அவர் தெரிவித்தார். 



ஒரு கொலை வழக்கு தொடர்பில், சிறையில் இருந்த அவ்வாடவன் அண்மையில்தான் ஜாமினில் வெளியில் வந்ததாக கூறப்பட்டது. 




-- பெர்னாமா